திருமுருகன்காந்திக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக புகார்


திருமுருகன்காந்திக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக புகார்
x
தினத்தந்தி 25 Sept 2018 4:06 AM IST (Updated: 25 Sept 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன்காந்திக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று திரும்பிய அவர் தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அடுக்கம்பாறை,

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து ஐ.நா.சபை கூட்டத்தில் பேசினார். பின்னர் நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்ட அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலையில் அவருக்கு வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு சிறையில் உள்ள டாக்டர்கள் சிகிச்சையளித்தனர். பின்னர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார், திருமுருகன்காந்தியை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு ரத்தம் மற்றும் ஸ்கேன் எடுத்துப்பார்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து பகல் 1 மணியளவில் அவர் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த திருமுருகன்காந்தி நிருபர்களிடம் கூறுகையில் “சிறையில் என்னை தனிமைப்படுத்தி உள்ளனர். யாரிடமும் பேச அனுமதிப்பதில்லை. இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்” என்றார்.


Next Story