வேலூர் அருகே, குடும்ப பிரச்சினையால் 2 மகள்களை கொன்று தந்தை தற்கொலை


வேலூர் அருகே, குடும்ப பிரச்சினையால் 2 மகள்களை கொன்று தந்தை தற்கொலை
x
தினத்தந்தி 25 Sept 2018 6:00 AM IST (Updated: 25 Sept 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப பிரச்சினையால் இரு மகள்களை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை, தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் வேலூர் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வேலூர்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- வேலூரை அடுத்த மேல்மொணவூர் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 36). இவர், ஆற்காட்டில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கமலா (32), கீரை வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு இரு மகள்கள் உண்டு. அங்குள்ள ஒரு பள்ளியில் மூத்த மகள் மேகலா (9), 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இளைய மகள் திவ்யகலா (7) 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கமலா நேற்று காலை வழக்கம்போல் கீரை வியாபாரத்துக்குச் சென்று விட்டார். வீட்டில் வெங்கடேசனும், இரு மகள்களும் இருந்தனர். கமலா, கீரை வியாபாரத்தை முடித்து விட்டு மாலை வீட்டுக்கு வந்தார். கணவர் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் அருகில் கட்டிலில் இரு மகள்களும் பிணமாக கிடந்ததைப் பார்த்துக் கதறினார்.

கமலா கதறி அழும் சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரின் வீட்டுக்கு வந்து பார்த்தனர். வெங்கடேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதும், இரு மகள்களும் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்தும் அழுதனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் விரிஞ்சிபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நாகராஜ் (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரனும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். அத்துடன் 3 பேரின் பிணங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேசன் தற்கொலை செய்வதற்கு முன்பு, தான் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

போலீஸ் விசாரணையில் வெங்கடேசனுக்கும், கமலாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அத்துடன் கமலா வேலைக்குச் செல்வது வெங்கடேசனுக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் வெங்கடேசன் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் வெங்கடேசன் தன்னுடைய இரு மகள்களையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, வீட்டில் கயிற்றால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story