கீழ்பென்னாத்தூர் அருகே அவசரவழி கதவு திடீரென திறந்ததால் பள்ளி பஸ்சிலிருந்து விழுந்த மாணவி


கீழ்பென்னாத்தூர் அருகே அவசரவழி கதவு திடீரென திறந்ததால் பள்ளி பஸ்சிலிருந்து விழுந்த மாணவி
x
தினத்தந்தி 25 Sept 2018 4:21 AM IST (Updated: 25 Sept 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

கீழ்பென்னாத்தூர் அருகே தனியார் பள்ளிக்கூட பஸ்சின் அவசர வழி கதவு திடீரென திறந்ததால் எல்.கே.ஜி. மாணவி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கீழ்பென்னாத்தூர்,

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த மங்கலம் கிராமத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிவர நிர்வாகம் சார்பில் பஸ் இயக்கப்படுகிறது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த பஸ் மூலம் அழைத்து வரப்பட்டு பள்ளி முடிந்ததும் அவரவர் ஊர்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு விடப்படுகின்றனர்.

நேற்றும் காலை மாணவ, மாணவிகள் பள்ளிக்கூட பஸ்சில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அதனை டிரைவர் வீரமணி ஓட்டிச்சென்றார். சோ-நம்மியந்தல் ஏரிக்கரை மூலை அருகே ஒரு திருப்பத்தில் பஸ் திரும்பியபோது எதிர்பாராத விதமாக பஸ்சின் அவசர வழிகதவு திறந்து கொண்டது.

அப்போது அந்த கதவின் அருகே அமர்ந்து வந்த சோ-நம்மியந்தலை சேர்ந்த விவசாயி கதிர்வேல் என்பவரது மகளான எல்.கே.ஜி.மாணவி லட்சயா (வயது 4) ஓடும் பஸ்சிலிருந்து சாலையில் விழுந்தார். இதனை கண்ட சக மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர்.

இந்த நிலையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த லட்சயாவை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். லட்சயாவுக்கு கை, கால், உதடுகளில் காயம் ஏற்பட்டது. மேலும் வலதுகையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் அவளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து பள்ளிக்கூட பஸ்சை ஓட்டி சென்ற டிரைவர் வீரமணியை கைது செய்தார்.

அனைத்து பள்ளிக்கூட பஸ்களும் கலெக்டர் முன்னிலையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டபின்னரே அவை இயங்க அனுமதிக்கப்படுகின்றன. அதன்பின் அவ்வப்போது பஸ்சை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகிகளுக்கு உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ஓடும் பஸ்சில் அவசர வழிக்கதவு தானாக திறந்து கொண்டுள்ளது. பள்ளிக்கூட நிர்வாகத்தை நம்பித்தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பஸ்சில் அனுப்புகின்றனர். எனவே அடிக்கடி அந்த பஸ்களை அதிகாரிகள் சோதனையிட்டு பாதுகாப்பாக உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story