செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு விழுந்து வக்கீல் காயம்


செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு விழுந்து வக்கீல் காயம்
x
தினத்தந்தி 25 Sept 2018 4:32 AM IST (Updated: 25 Sept 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மேற்கூரையின் பூச்சு விழுந்து வக்கீல் காயம் அடைந்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி கூறினார்.

செய்யாறு,

செய்யாறு டவுன் ஆற்காடு சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலேயே முதல் முறையாக குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே 2-வது தளத்தின் மேற் கூரையில் விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சு விழுந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் நீதிமன்ற அலுவல் பணிகள் நடந்து கொண்டிருந்த போது காலை 11.30 மணி அளவில் வக்கீல்கள் வாதாடிக்கொண்டிருந்த போது திடீரென மேற்கூரையின் சிமெண்டு பூச்சு விழுந்தது. அப்போது சிமெண்டு பூச்சுகள் சிதறி விழுந்ததில் வக்கீல் நாராயணன் என்பவர் காயம் அடைந்தார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் ஆஸ்பத்திரிக்கு சென்று, வக்கீல் நாராயணனை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் முதன்மை மாவட்ட நீதிபதி மகிழேந்தி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், செய்யாறு ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கும் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கட்டிட விபத்து ஏற்பட்டு, வக்கீல் நாராயணன் காயம் அடைந்துள்ளார். மோசமான கட்டுமானங்களால் மேற்கூரையின் சிமெண்டு பூச்சுகள் விழுகிறது. இதுகுறித்து தக்க விசாரணை நடத்தப்படும். மேலும் கட்டுமான காலத்தில் இருந்த பொறியியல் துறை சார்ந்தவர்கள், பொதுப்பணி துறை அலுவலர்கள், கட்டுமானத்தில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனங்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

Next Story