தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
புவனகிரியில் தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புவனகிரி,
சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் புவனகிரி வழியாக செல்கின்றன. ஆனால் ஒரு சில பஸ்கள் புவனகிரி வழியாக செல்லாமல், பி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக கடலூர் செல்கின்றன. இதனால் புவனகிரி மற்றும் கீரப்பாளையம் பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லும் தனியார் பஸ்சில் பயணிகள் சிலர் ஏறி புவனகிரி செல்ல வேண்டும் என கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டனர். அதற்கு அவர் புவனகிரிக்கு பஸ் செல்லாது என்று கூறி அவர்களை கண்டக்டர் கீழே இறக்கி விட்டார். இதையடுத்து அவர்கள் மற்றொரு பஸ்சில் ஏறி புவனகிரி வந்தனர். பின்னர் சிதம்பரம் பஸ்நிலையத்தில் நடந்தவற்றை ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக அந்த தனியார் பஸ் வந்தது. இதுபற்றி அறிந்த பொதுமக்கள் புவனகிரி பாலம் அருகில் அந்த பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைத்து பஸ்களும் புவனகிரி வழியாக வந்து செல்ல அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதையேற்று பொதுமக்கள் பஸ்சை விடுவித்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story