மோட்டார் வாகன ஆய்வாளர், உதவியாளருக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு
லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர், உதவியாளருக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு செய்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாபு (வயது 55). இவர் புதிய வேனுக்கு பதிவு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கடந்த 11-ந் தேதி விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதோடு இவருக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் செந்தில்குமாரையும் போலீசார் கைது செய்து இருவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.30 லட்சத்து 17 ஆயிரத்தை கைப்பற்றினர். மேலும் பாபு, செந்தில்குமார் ஆகியோரின் வங்கி கணக்குகளை முடக்கி வைத்த போலீசார், இருவரின் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை செய்தனர்.
இதனிடையே பாபு, செந்தில்குமார் ஆகிய இருவரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து இருவரையும் கடலூரில் இருந்து போலீஸ் வேனில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அழைத்து வந்து விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதையடுத்து பாபு, செந்தில்குமார் ஆகிய இருவருக்கும் மேலும் 15 நாட்கள் அதாவது அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி பிரியா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மீண்டும் விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேனில் போலீசார் அழைத்துச்சென்று கடலூர் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story