மலைக்கோட்டை விநாயகருக்கு 27 வகை அபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்


மலைக்கோட்டை விநாயகருக்கு 27 வகை அபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 26 Sept 2018 4:00 AM IST (Updated: 26 Sept 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மலைக்கோட்டை,

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர் கோவிலில் கடந்த 13-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் உபயதாரர்களை கொண்டு, மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கு பால கணபதி, நாகாபரண கணபதி, லஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூசிக கணபதி, ராஜ கணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாருட கணபதி, சித்தி புத்தி கணபதி அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடைபெற்றது.

இதில் 13-ம் நாளான நேற்று பகல் 12 மணிக்கு மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கும், மாணிக்க விநாயகர் மூலவருக்கும் திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி, சந்தனாதி தைலம், திரவிய பொடி, அரிசி மாவு, நெல்லி முல்லி பொடி, மஞ்சள் பொடி, குங்குமம், தேன், நெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், எலுமிச்சை பழம், சாத்துக்குடி, கரும்புசாறு, திராட்சை, விளாம்பழம், மாதுளை, அன்னாசிப்பழம், முப்பழம், பழவகைகள், அன்னம், வெந்நீர், இளநீர், சந்தனம், சொர்ணாபிஷேகம், பன்னீர் உள்ளிட்ட 27 வகையான அபிஷேகமும், அதைத்தொடர்ந்து நடன கணபதிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 14-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மூலவர், உற்சவருக்கு திருக்கோவில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனையும் நடைபெற்று விநாயகர் சதுர்த்தி விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Next Story