மது குடித்துவிட்டு துன்புறுத்தி வந்த மகனை கொன்று எரித்த வழக்கில் பெண் அதிகாரி உள்பட 3 பேருக்கு ஆயுள்


மது குடித்துவிட்டு துன்புறுத்தி வந்த மகனை கொன்று எரித்த வழக்கில் பெண் அதிகாரி உள்பட 3 பேருக்கு ஆயுள்
x
தினத்தந்தி 26 Sept 2018 5:15 AM IST (Updated: 26 Sept 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில், மகனை கொலை செய்து எரித்த வழக்கில் அரசு பெண் அதிகாரியான தாய், தந்தை மற்றும் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ராஜபாளையம் அருகேயுள்ள மங்காபுரம் முத்தன் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது54). இவரது மனைவி சாந்தி (54). இவர் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் ஊர் நல அதிகாரியாக பணி செய்து வந்தார்.

இவர்களது மகன் சிலம்பரசன் (28) ஐ.டி.ஐ. முடித்துவிட்டு, மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது எம்.ரெட்டியபட்டியை சேர்ந்த விஜயபாண்டி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.மதுப் பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருந்ததால் சிலம்பரசனுக்கும் மனைவி விஜயபாண்டிக்கும் தகராறு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுள்ளனர். இதனையடுத்து சிலம்பரசன் வேலைக்கும் செல்லாமல் தனது தாய் மற்றும் தந்தையுடன் ராஜபாளையத்தில் வசித்தார். பெற்றோரிடம் தினமும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து அவர்களை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மகன் மீது கடும் வெறுப்பில் இருந்துள்ளனர்.

இரவு வீட்டில் சிலம்பரசன் மது போதையில் அடுப்பில் அப்பளம் பொறித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது தந்தை ஏதோ கூற இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமுற்ற சிலம்பரசன் கொதிக்கும் எண்ணெய்யை முருகனின் காலில் ஊற்றியுள்ளார்.

இதனால் சிலம்பரசன் மீது மேலும் வெறுப்புற்ற பெற்றோர், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். ராஜபாளையம் டி.பி.மில்ஸ் காட்டுதெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமராஜ் (30) பெண் அதிகாரி சாந்திக்கு பழக்கமானவர். எனவே அவரது துணையோடு மகனை தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்தனர்.

5.10.2016 அன்று ராமராஜுன் ஆட்டோவை வரச் சொல்லி, சிலம்பரசனுக்கு பெண் பார்க்கப் போவதாகக் கூறி அவரை சில பெண தரகர்களிடம் கூட்டிச் சென்று காட்டியுள்ளார்கள். பின்னர் வீடு திரும்பியதும் சிலம்பரசன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்துள்ளார். தனக்கு திருமணம் ஆகப்போவதைக் கொண்டாட, தந்தையிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த தந்தை முருகன், ஆட்டோ டிரைவர் ராமராஜுடம் பணம் கொடுத்து, மகன் சிலம்பரசனுக்கு அளவுக்கு அதிகமாக மயங்கும் அளவிற்கு மது வாங்கிக் கொடுக்குமாறு கூறி அனுப்பியுள்ளார்.அதன்படி மதுகுடித்து மயக்க நிலையில் வந்த சிலம்பரசனை முருகன், ராமராஜ், சாந்தி ஆகியோர் சேர்ந்து நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்கள்.

பின்னர் ஆட்டோவில் உடலை ஏற்றிக் கொண்டு, ரூ.350–க்கு பெட்ரோல் வாங்கிக் கொண்டு ராஜபாளையம், புதியாதிகுளம் கண்மாய் அருகேயுள்ள காலி இடத்திற்கு கொண்டு சென்று அங்கு உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்கள்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பெற்ற மகனையே ஆட்டோ டிரைவரின் துணையோடு கொலை செய்திருப்பது தெரியவந்தது. மூவரையும் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி முத்துசாரதா, குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Related Tags :
Next Story