டியூசனுக்கு வந்த 20 வயது மாணவியை திருமணம் செய்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்; பஞ்சாபில் இருந்து ராமேசுவரத்துக்கு அழைத்து வந்தபோது சிக்கினார்
டியூசன் படிக்க வந்த 20 வயது மாணவியை திருமணம் செய்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பஞ்சாப்பில் இருந்து ராமேசுவரத்துக்கு அழைத்துவந்தபோது போலீசில் சிக்கினார்.
ராமேசுவரம்,
பஞ்சாப் மாநிலம் அபோகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65). பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். இவரிடம் அதேபகுதியை சேர்ந்த மகத் (20) என்ற கல்லூரி மாணவி டியூசன் படித்துவந்தார். இந்த நிலையில் இருவரும் திடீரென்று மாயமாகிவிட்டனர்.
இதுகுறித்து மாணவியின் தந்தை போலீசாரிடம் புகார் செய்தார். அதில், தனது மகளை ஜெய்கிருஷ்ணன் கடத்திச் சென்றுவிட்டதாக கூறியிருந்தார். இருவரையும் தீவிரமாக தேடி வந்த பஞ்சாப் போலீசார், இதுதொடர்பாக அனைத்து பகுதிக்கும் தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையில் அவர்கள் ராமேசுவரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருப்பது தெரியவந்தது. ராமேசுவரம் போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பான தகவலை இருவரும் தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:–
ஜெய்கிருஷ்ணனுக்கு திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர். அவருடைய மனைவி இறந்துவிட்டார். அவர் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில் தான் மகத் படித்துவந்தார். அப்போது மாணவி மீது பிரியமாக இருப்பதாக கூறி ஜெய்கிருஷ்ணன் சில உதவிகளை செய்துகொடுத்தார்.
பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறியதுடன், டியூசனும் எடுத்துவந்தார். இதனால் ஜெய்கிருஷ்ணன் மீது மாணவிக்கு ஈர்ப்பு உருவானது. ஆனால் இதை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆசிரியர், மாணவி உறவு என்றே நினைத்துக்கொண்டனர். ஆனால் இருவரும் காதல் வயப்பட்டு வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றத்தொடங்கினர்.
ஜெய்கிருஷ்ணனுக்கு ஓய்வூதியம் ரூ.25 ஆயிரம் வந்ததும் இருவரும் ஜாலியாக வெளியே சென்றுவருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அதன்படி இந்த மாதம் பணம் கிடைத்ததும் கடந்த 11–ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியே கிளம்பினர். முதலில் டெல்லி சென்று சுற்றிப்பார்த்துவிட்டு அங்கிருந்து பல இடங்களுக்கு சென்றனர்.
இரு தினங்களுக்கு முன்பு ராமேசுவரம் வந்து தந்தை–மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்தனர். இதற்கிடையே மகத்தின் தந்தை போலீசில் புகார் கொடுத்ததால் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது ராமேசுவரத்தில் இருப்பது தெரியவந்தது. பஞ்சாப் போலீசாரின் தகவலை தொடர்ந்து ராமேசுவரம் போலீசாரிடம் அவர்கள் சிக்கினர்.
பஞ்சாப் போலீசார் மகத்தின் தந்தையுடன் ராமேசுவரம் வந்தனர். அப்போது, தானும், ஜெய்கிருஷ்ணனும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாக மகத் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இருவரையும் ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் பஞ்சாப்புக்கு அழைத்துச்சென்றனர்.