இமாசலபிரதேசத்தில் கனமழையில் சிக்கிய ஓசூரை சேர்ந்த 21 பேர் பத்திரமாக இருப்பதாக உறவினர்கள் தகவல்


இமாசலபிரதேசத்தில் கனமழையில் சிக்கிய ஓசூரை சேர்ந்த 21 பேர் பத்திரமாக இருப்பதாக உறவினர்கள் தகவல்
x
தினத்தந்தி 26 Sept 2018 4:15 AM IST (Updated: 26 Sept 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

இமாசலபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலத்தின் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஓசூர்,

மழை மற்றும் வெள்ளத்தால் குலு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வெங்கடேஷ் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் வணங்காமுடி தலைமையில் காலாண்டு விடுமுறையையொட்டி, பள்ளியின் முதல்வர் பத்மா, வினோதினி, சத்யா, முருகம்மாள், நாகலட்சுமி, ஷீலா, புளோரா, முனீஸ்வரி, சாந்தா உள்ளிட்ட 13 ஆசிரியைகள் மற்றும் அவர்களது குழந்தைகள் என மொத்தம் 21 பேர் இமாசலபிரதேசத்திற்கு சுற்றுலா சென்றனர்.

இந்த நிலையில் வெள்ளத்தின் பிடியில் சிக்கிய இவர்கள் குலுமணாலியில் உள்ள விடுதியில் பத்திரமாக தங்கியுள்ளதாக, வணங்காமுடி செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததாக அவருடைய உறவினர்கள் கூறினர். மேலும், சுற்றுலாவை முடித்துக்கொண்டு இன்று(புதன்கிழமை) ஓசூர் திரும்ப வேண்டிய நிலையில், அங்கு போக்குவரத்து இன்னும் சீரடையாததால் அவர்கள் ஓசூர் திரும்ப மேலும் 2 அல்லது 3 நாட்களாகும் என்றும் தெரிகிறது.

ஓசூரை சேர்ந்த 21 பேர், இமாசலபிரதேச கன மழையில் சிக்கி தவித்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனபோதிலும், அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதும், அங்கிருந்தவாறு தொடர்ந்து செல்போன் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்வதாலும் குடும்பத்தாரிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story