ஊட்டி அருகே பழுதான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


ஊட்டி அருகே பழுதான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Sept 2018 3:15 AM IST (Updated: 26 Sept 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே பழுதான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்டது புதுஹட்டி, துளித்தலை கிராமங்கள். இந்த கிராமங்களில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. ஊட்டி–இத்தலார் சாலையில் இருந்து புதுஹட்டி, துளித்தலை கிராமங்களுக்கு செல்லும் தார்ச்சாலை பழுதாகி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் பல்வேறு இடங்களில் கற்கள் பெயர்ந்து இருப்பதால் முதியவர்கள், நோயாளிகள் நடந்து செல்ல மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு பழுதடைந்து மோசமான நிலையில் இருக்கும் அந்த சாலையை வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்லும் மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ–மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர். மலைமேடான பகுதியில் கற்கள் பெயர்ந்த சாலையில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் வாகனங்களில் பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்று விடுகின்றன.

மேலும் அந்த கிராமங்களில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டு இருக்கிறது. மலைக்காய்கறிகளை அறுவடை செய்து சரக்கு வாகனங்களில் ஏற்றி, ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அப்போது அந்த சாலையில் இயக்கப்படும் சரக்கு வாகனத்தின் டயரை கற்கள் பதம் பார்க்கின்றன. அவசர நேரங்களில் அந்த கிராமங்களுக்கு ஆம்புலன்சு கூட எளிதில் சென்று வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மழைக்காலங்களில் அந்த குண்டும், குழியுமான சாலை வழியாக பொதுமக்கள், மாணவ– மாணவிகள் நடந்து செல்ல மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:–

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு புதுஹட்டி, துளித்தலை கிராமங்களுக்கு செல்லும் சாலை இதேபோல் குண்டும், குழியுமாக இருந்தது. அதனால் கிராம மக்கள் நஞ்சநாடு, ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சிரமப்பட்டனர். பின்னர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டோம். இதையடுத்து இத்தலார் ஊராட்சி சார்பில் அந்த சாலை சீரமைக்கப்பட்டு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அதன்பின்னர் பெய்த மழையால் தார்ச்சாலையில் கற்கள் பெயர்ந்து மீண்டும் மோசமான நிலைமைக்கு மாறி இருக்கிறது.

2 கிராம மக்களும் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், அந்த சாலை வழியாக ஊட்டி–இத்தலார் சாலைக்கு வந்து அரசு பஸ்சில் ஏறி செல்ல வேண்டும். அவ்வாறு வரும்போது, முதியவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மாணவ– மாணவிகள் தினமும் கடும் அவதியுடன் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகிறார்கள். சாலையை சீரமைத்து தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே பொதுமக்களை அவதிக்குள்ளாக்கும் அந்த சாலையை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story