இட்டமொழியில் அரிசிக்காக ரே‌ஷன் கடை முன்பு காத்து கிடந்த முதியவர் தாசில்தார் கடையை திறந்து அரிசி வழங்கினார்


இட்டமொழியில் அரிசிக்காக ரே‌ஷன் கடை முன்பு காத்து கிடந்த முதியவர் தாசில்தார் கடையை திறந்து அரிசி வழங்கினார்
x
தினத்தந்தி 26 Sept 2018 3:00 AM IST (Updated: 26 Sept 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

இட்டமொழியில் அரிசிக்காக 5 நாட்களாக ரே‌ஷன் கடையின் முன்பு முதியவர் காத்து கிடந்தார்.

இட்டமொழி, 

இட்டமொழியில் அரிசிக்காக 5 நாட்களாக ரே‌ஷன் கடையின் முன்பு முதியவர் காத்து கிடந்தார். இதையடுத்து தாசில்தார் அந்த கடையை தினமும் திறந்து அரிசி வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.

5 கடைகளுக்கும் ஒரு விற்பனையாளர் 

இட்டமொழியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் ரே‌ஷன் கடை செயல்பட்டு வந்தது. கடந்த ஓராண்டுக்கு முன்பு ரே‌ஷன் கடை வள்ளியூர் மார்க்கெட்டிங் சொசைட்டியுடன் இணைக்கப்பட்டு ரே‌ஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இட்டமொழி ரே‌ஷன் கடையில் விற்பனையாளர் ராணி மட்டும் வேலை பார்த்து வருகிறார்.

மேலும் அவர் தான் இட்டமொழி ரே‌ஷன் கடைக்கு உட்பட்ட இட்டமொழி, விஜயஅச்சம்பாடு, புதூர், பெரும்பனை, அழகப்பபுரம் ஆகிய 5 ஊர்களுக்கும் சென்று பில் போட்டு, பொருளையும் எடை போட்டு கொடுக்க வேண்டும். இதனால் இட்டமொழி ரே‌ஷன் கடை சரியாக திறக்கப்படுவது இல்லை. மேலும் இட்டமொழி ரே‌ஷன் கடை மூலம் 2,300 கார்டுதாரர்கள் உள்ளனர்.

இந்தநிலையில் ராணி தினமும் காலையில் இட்டமொழியில் இருந்து வள்ளியூர் மார்க்கெட்டிங் சொசைட்டிக்கு சென்று கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் இட்டமொழிக்கு திரும்பி வந்து ரே‌ஷன் கடையில் பொருட்கள் வழங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அரிசிக்காக காத்து கிடந்த முதியவர் 

இதனிடையே இட்டமொழி ரே‌ஷன் கடையில் தெற்கு தெருவை சேர்ந்த பரமானந்தம் (வயது 75) என்ற முதியவர் கடந்த 5 நாட்களாக ரே‌ஷன் கடைக்கு அரிசி வாங்க வந்து, கடை பூட்டி கிடப்பதை பார்த்து கடையின் முன்புள்ள மரத்தடியில் பசியுடன் படுத்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முத்துக்குட்டி என்பவர் பொதுமக்களுடன், திசையன்விளை தாசில்தாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் திசையன்விளை தாசில்தார் தாஸ்பிரியன், வருவாய் ஆய்வாளர் மஞ்சு, கிராம நிர்வாக அலுவலர் குமார் ஆகியோருடன் நேரில் வந்து ரே‌ஷன் கடையை திறந்து பொதுமக்களுக்கு அரிசி வழங்க நடவடிக்கை எடுத்தார். முதியவர் பரமானந்தத்துக்கு முதலில் ரே‌ஷன் அரிசி வழங்கப்பட்டது.

பின்னர் தாசில்தார் தாஸ் பிரியன், இட்டமொழி ரே‌ஷன் கடைக்கு மணிகண்டன் என்பவரை தினசரி கடை திறந்து பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்தார்.

Next Story