திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ளாதவர்களுக்கு அபராதம்


திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ளாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 26 Sept 2018 3:45 AM IST (Updated: 26 Sept 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதித்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நடவடிக்கை மேற்கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மாவட்டத்தை தூய்மை மாவட்டமாக வைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கியும், அரசு அலுவலர்கள் மூலமாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் பேரணிகள் நடத்தியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து கலெக்டர் நேற்று காலை திருவள்ளூர் நேதாஜி தெரு, அப்பாசாமி தெரு, பஜார் வீதி, ஜே.என்.சாலை, பெரியக்குப்பம், மோதிலால் தெரு, அய்யனார் தெரு போன்ற பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் தினந்தோறும் தூய்மையாக பராமரித்து அன்றாடம் சேரும் குப்பைகளை அதற்கென ஒதுக்கப்பட்ட குப்பை தொட்டிகளில் போட வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது சுகாதார பணியாளர்கள் டெங்கு கொசுக்களை ஒழிப்பது குறித்து பொதுமக்களிடம் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். ஆய்வின்போது அந்த பகுதியில் உள்ள 3 வீடுகளுக்கான சுற்றுப்புறங்கள் தூய்மையாக வைத்து கொள்ளாமல் கொசுக்கள் உற்பத்தியாகும் விதமாக இருந்தது. அந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1,000 வீதம் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தார்.

மேலும் இது போல் செய்யக்கூடாது என அவர் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் அவர் அந்த பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி அங்கு தண்ணீர் தூய்மையாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், நகராட்சி ஆணையர் முருகேசன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் மற்றும் நகராட்சி பணியாளர்கள், அரசு ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர்.

Next Story