நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் 9 பேர் விடுதலை


நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் 9 பேர் விடுதலை
x
தினத்தந்தி 25 Sep 2018 11:45 PM GMT (Updated: 25 Sep 2018 8:05 PM GMT)

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரை விடுதலை செய்து கோபி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கோபி,

கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 2000–ம் ஆண்டு ஜூலை மாதம் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் உள்ள அவருடைய பண்ணையில் தங்கி இருந்தார்.

அப்போது சந்தன கடத்தல் வீரப்பன் தனது கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா மற்றும் பலருடன் வந்து துப்பாக்கி முனையில் ராஜ்குமாரை கடத்திச்சென்றார். பின்னர் 108 நாட்கள் பிணைக்கைதியாக வைக்கப்பட்டு ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து கோவை மற்றும் சேலம் மத்திய சிறைகளில் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

தொடர்ந்து இந்த வழக்கு கோபி 3–வது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த வழக்கு கோபி சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பரிவுகளிலும், இந்திய படைக்கலன் சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டப்படியும் கோபி கோர்ட்டில் கடந்த 2007–ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவருடைய கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பே கடந்த 2004–ம் ஆண்டு அவர்கள் 3 பேரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு கோபி கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மணி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், சந்தன கடத்தல் வீரப்பனுக்கும் எந்தவிதமான தொடர்பு என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களையும் குறிப்பிடவில்லை.

ஆகையால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோவிந்தராஜ் (46), அன்றில் (45), பசுவண்ணா (57), புட்டுசாமி (53), கல்மண்டிராமன் (52), மாரன் (48), செல்வம் (43), அமிர்தலிங்கம் (44), நாகராஜ் (47) ஆகிய 9 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று உத்தரவிட்டார்.


Next Story