சிக்குன்குன்யா காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை: பிள்ளையார்குப்பத்தில் ஜிப்மர் மருத்துவ குழுவினர் முகாம்


சிக்குன்குன்யா காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை: பிள்ளையார்குப்பத்தில் ஜிப்மர் மருத்துவ குழுவினர் முகாம்
x
தினத்தந்தி 26 Sept 2018 4:30 AM IST (Updated: 26 Sept 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

பிள்ளையார்குப்பம் கிராமத்தில் சிக்குன்குன்யா காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜிப்மர் மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து சிகிச்சை அளித்தனர்.

பாகூர்,

புதுவை மாநிலம் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை 100–க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, புதுவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து பலருக்கு காய்ச்சல் பரவி வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. இதில் சிலருக்கு சிக்குன் குன்யா காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்ட 26 பேர் புதுவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் சுகாதாரத்துறையினர் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். வீடு வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், தேங்காய் ஓடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ளதா? என்று ஆய்வு செய்தனர். மேலும் கழிவுநீர் வாய்க்காலில் கிருமி நாசினி தெளித்து, மேற்கொண்டு நோய் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று ஜிப்மர் மருத்துவக்குழுவினர் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் வளாகத்தில் முகாமிட்டு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இவர்களுடன் சுகாதாரத்துறையினர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் என 100–க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். வீடுகளில் இருந்து வரமுடியாதவர்களுக்கு டாக்டர்கள் நேரடியாக சென்று பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

மருத்துவ முகாமை அமைச்சர் கந்தசாமி, சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் ஆகியோர் பார்வையிட்டு, நோய் தடுப்புக்கான ஆலோசனைகளை கூறினர். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் தடுக்கவும், வீட்டின் அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்யவும், குடிநீரை காய்ச்சி குடிக்கவும் கிராம மக்களை அறிவுறுத்தினர்.

அப்போது கிராம மக்கள், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும், சுற்றுப்பகுதியில் வாய்க்கால் தூர்வாரப்படாததால் அதில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதாகவும், அதனை உடனே சுத்தம் செய்யவும் கேட்டுக்கொண்டனர். மேலும், மருத்துவ முகாமை தொடர்ந்து நடத்தவேண்டும், அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் தயாராக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதற்கு அமைச்சர் கந்தசாமி, கிராமத்தில் காய்ச்சல் குணமாகுவம் வரை மருத்துவ முகாம் நடத்தவும், அதுவரை ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story