காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: கணவர் வீட்டை உறவினர்கள் சூறையாடியதால் பரபரப்பு


காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: கணவர் வீட்டை உறவினர்கள் சூறையாடியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Sept 2018 4:30 AM IST (Updated: 26 Sept 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அப்பெண்ணின் கணவர் வீட்டை சூறையாடினர்.

துறையூர்,

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த கரட்டாம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26). இவருடைய மனைவி மேகலா(22). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த அவர்கள் 2 பேரும் காதலித்து, கடந்த 1¼ ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

மணிகண்டனுக்கும், மேகலாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு செல்வது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், மணிகண்டன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அப்போது வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்ட மேகலா மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புலிவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மேகலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேகலா தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்ததும் அவருடைய உறவினர்கள் ஆத்திரம் அடைந்து மணிகண்டனின் வீட்டை அடித்்து நொறுக்கி சூறையாடினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேகலாவுக்கு திருமணமாகி 1¼ ஆண்டே ஆவதால் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story