பெங்களூருவில் 2-வது நாளாக கொட்டிய மழை: சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
பெங்களூருவில் 2-வது நாளாக மழை கொட்டித்தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 2 நாட்களில் 300 மரங்கள் முறிந்து விழுந்தன.
பெங்களூரு,
பெங்களூருவில் 2-வது நாளாக மழை கொட்டித்தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 2 நாட்களில் 300 மரங்கள் முறிந்து விழுந்தன.
முழங்கால் அளவுக்கு...
தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் குடகு உள்பட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த மாதத்துடன் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வருகிறது.
இந்த நிலையில் பெங்களூருவில் பருவமழை பெய்யத்தொடங்கியுள்ளது. கடந்த 23-ந் தேதி நள்ளிரவில் கனமழை கொட்டித்தீர்த்து. ஒரேநாள் இரவில் அந்த மழை, பெங்களூருவை குறிப்பாக நகரின் தெற்கு பகுதிகளை புரட்டிப்போட்டுவிட்டது. ஜெயநகர், பன்னரகட்டா, எலச்சனஹள்ளி, பொம்மனஹள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் தேங்கி நின்றது.
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அடுக்குமாடி கட்டிடங்களை மழைநீர் சூழ்ந்து கொண்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2-வது நாளாக மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக மடிவாளா, பொம்மனஹள்ளி, பேகூர், ஜே.பி.நகர், பன்னரகட்டா ரோடு, ஜெயநகர், சாந்திநகர், மெஜஸ்டிக், மல்லேசுவரம், விதான சவுதா, ஹெப்பால் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அந்த சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஹெப்பால் ரோட்டில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
300 மரங்கள் முறிந்துவிழுந்தன
கடந்த 2 நாட்கள் பெய்த மழைக்கு நகரில் 300 மரங்கள் முறிந்துவிழுந்துள்ளதாக துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தெரிவித்தார். முதல்-மந்திரி குமாரசாமி, “பெங்களூருவில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மழை பாதிப்புகளை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்“ என்று கூறினார்.
மழை பாதிப்பு குறித்து மேயர் சம்பத்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், “பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்துள்ளது. நான் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகளுடன் ஆலோசித்து, பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுத்தேன். துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் என்னிடம் தொடர்பு கொண்டு மழை பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இந்த மழையால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது“ என்றார். பெங்களூருவில் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story