கனமழை எதிரொலி: பெல்லந்தூர் ஏரியில் மீண்டும் உருவான வெள்ளை நுரை வாகன ஓட்டிகள் அவதி
பெங்களூருவில் பெய்த கனமழையின் காரணமாக பெல்லந்தூர் ஏரியில் மீண்டும் வெள்ளை நுரை உருவானது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பெங்களூரு,
பெங்களூருவில் பெய்த கனமழையின் காரணமாக பெல்லந்தூர் ஏரியில் மீண்டும் வெள்ளை நுரை உருவானது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பெல்லந்தூர் ஏரி
பெங்களூரு நகரில் உள்ள பெல்லந்தூர், வர்த்தூர், எமலூர் ஆகிய ஏரிகளில் அடிக்கடி வெள்ளை நுரை உருவாகி ஆறாக ஓடுவது வழக்கமாக உள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், சாக்கடை கழிவுகள் ஏரிகளில் கலப்பதால் தான் ஏரிகளில் வெள்ளை நுரைகள் உருவாகுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பெல்லந்தூர் ஏரியில் வெள்ளைநுரை உருவானது தொடர்பான வழக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நடந்தது.
இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் கர்நாடக அரசுக்கும், பெங்களூரு மாநகராட்சிக்கும் கண்டனம் தெரிவித்ததோடு, ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அத்துடன், பெல்லந்தூர் ஏரிக்கரையோரம் செயல்படும் தொழிற்சாலைகளை மூட உத்தரவு பிறப்பித்தது. இந்த நடவடிக்கைகள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக சில தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளதோடு, சுத்திகரிக்கப்படாமல் ஏரியில் கழிவுநீரை கலந்த பல்வேறு தொழிற்சாலைகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், பெல்லந்தூர் ஏரியை சுற்றி உயரமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மீண்டும் வெள்ளை நுரை
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பெங்களூரு நகரில் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் இரவில் பெய்த கனமழையால் பெல்லந்தூர் ஏரியில் நேற்று காலையில் வெள்ளை நுரை உருவானது. இந்த நுரையானது ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் பாதையில் பரவியதோடு, 10 அடி உயரம் எழுந்து காற்றில் பறந்தது.
இதனால் ஏரிக்கரையோரம் உள்ள சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மீது வெள்ளை நுரை விழுந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். விரைவில் பெல்லந்தூர் ஏரியில் நுரை உருவாகாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே, கடந்த ஆண்டில் சிலமுறை பெல்லந்தூர் ஏரியில் வெள்ளை நுரை உருவானதும், காய்ந்த செடிகள் தீப்பற்றி எரிந்ததும், தீயை 5 ஆயிரம் ராணுவ வீரர்கள் சேர்ந்து போராடி அணைத்ததும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story