தாம்பரம் சானடோரியம் அருகே தேங்கி இருக்கும் கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் காமாட்சி காலனி பகுதியில் தேங்கியிருக்கும் கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனையின் எதிர்புறம் சிட்லபாக்கம் பேரூராட்சி எல்லையில் காமாட்சி காலனி 2-வது தெரு உள்ளது. இங்கு ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் உள்ளது. சிட்லபாக்கம் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் மழைநீர் கால்வாய் பணிக்காக இந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வேலை நடைபெறும் போது அடைக்கப்பட்டு சில நாட்களுக்கு பிறகு திறந்து விடப்பட்டு வந்த கால்வாய், தற்போது கடந்த 1 மாதமாக மூடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
சுகாதார சீர்கேடு
இதனால் அருகில் உள்ள தெருக்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் காமாட்சி காலனி 2-வது தெரு முழுவதும் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிக அளவு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இந்த சாலையை பயன்படுத்த முடியாத அளவிற்கு கழிவு நீர் இந்த பகுதி முழுவதும் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கோரிக்கை
இந்த கழிவு நீரை வெளியேற்ற வேண்டும் என பல முறை சிட்லபாக்கம் பேரூராட்சியில் புகார் அளித்தும், எந்த அதிகாரியும் வந்து பார்க்கவும் இல்லை. எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.
குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவு நீரை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story