கால்நடை டாக்டரின் மனைவியிடம் 6 பவுன் நகை பறிப்பு
திருச்செங்கோட்டில், முகவரி கேட்பதுபோல நடித்து கால்நடை டாக்டரின் மனைவியிடம் 6 பவுன் நகையை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திருச்செங்கோடு,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் அர்த்தனாரீஸ்வரன். கால்நடை டாக்டர். இவருடைய மனைவி வசந்தி (வயது 50). இவர்களது வீட்டு முன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 4 மணியளவில் வசந்தி தனது பேத்தியை கையில் வைத்துக்கொண்டு வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் வசந்தி வீட்டு முன் வந்தனர். பின்னர் அங்கு நின்ற வசந்தியிடம் முகவரி கேட்பதுபோல் நடித்தனர். திடீரென வசந்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத வசந்தி சத்தம் போட்டார். உடனே 2 வாலிபர்களும் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதுபற்றி திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கால்நடை டாக்டர் மனைவியிடம் துணிகரமான முறையில் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story