கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 26 Sept 2018 4:45 AM IST (Updated: 26 Sept 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

செங்குன்றம், 

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு 1983-ம் ஆண்டு ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்ட ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்க வேண்டும்.

அதன்படி 1983-ம் ஆண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு திறந்த வெளி கால்வாய் வெட்டப்பட்டது. 1983-ம் ஆண்டு தொடங்கிய இந்த பணிகள் 1995-ம் ஆண்டு முடிக்கப்பட்டன. 1996-ம் ஆண்டு முதன்முதலாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி இது வரை 40 முறை தண்ணீீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஜனவரி மாதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டது. கண்டலேறு அணையில் நீர் மட்டம் குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

பலத்த மழை

இந்த நிலையில் கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரி வறண்டு விட்டதால் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு, சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த ந்ிலையில் 2-வது தவணையாக ஜூலை மாதத்தில் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

ஆனால் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். இந்த நிலையில் ஆந்திராவில் கிருஷ்ணா நதி நீர் பிடிப்பு பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் பலத்த மழை பெய்தது.

தண்ணீர் திறப்பு

இதனால் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் பலனாக ஸ்ரீசைலம் அணை முழுவதுமாக நிறம்பியது. அங்கிருந்து சோமசீலா அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த அணையும் நிரம்பியதால் அங்கிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஸ்ரீசைலத்தில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கண்டலேறு அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இந்த ந்ிலையில் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதினர். அதன்படி கடந்த 22-ந் தேதி காலை 11 மணிக்கு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விட்டனர்.

இது படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கண்டலேறு அணையின் கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி 10.10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

கோடை வெயிலுக்கு கிருஷ்ணா நதி கால்வாய் வறண்டு காணப்படுவதால் தண்ணீர் பாயும் வேகம் மிகவும் குறைவாக உள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 25 கிலோ மீட்டர் தூரம் வரைதான் தண்ணீர் பாய்ந்து வருகிறது. கண்டலேறு - பூண்டி இடையே உள்ள தூரம் 177 கிலோ மீட்டராகும். இந்த கணக்குபடி பார்த்தால் கிருஷ்ணா நதி நீர் வருகிற வெள்ளியன்று தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைபாக்கம் ஜீரோ பாயிண்டை வந்தடைய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கிருந்து பூண்டி ஏரிக்கு செல்ல கூடுதலாக ஒருநாள் ஆகும் . இப்படி கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தாலும் உடனே சென்னைக்கு தண்ணீர் வினியோகம் செய்ய முடியாது.

கூடுதல் தண்ணீர்

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவரப்படி வெறும் 13 மில்லியன் கனஅடி தண்ணீீர் மட்டும் இருப்பு உள்ளது. இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நேற்று மதியம் முதல் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதாவது 350 கனஅடியாக திறந்து விடப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் தங்கு தடையின்றி பூண்டி ஏரியை சென்றடைவதற்காக ஊத்துக்கோட்டை அருகே அம்பேத்கர்நகர் பகுதியில் கிருஷ்ணா நதி கால்வாய் தூர் வாரும் பணிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜார்ஜ், பிரதீஷ் ஆகியோரது மேற்பார்வையில் நடந்து வருகிறது.

Next Story