வெள்ள பாதிப்பை தடுக்க அடையாறு ஆற்றில் புதிய பாலங்கள் கட்டும் பணி தீவிரம்


வெள்ள பாதிப்பை தடுக்க அடையாறு ஆற்றில் புதிய பாலங்கள் கட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 26 Sept 2018 5:00 AM IST (Updated: 26 Sept 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் அடையாறு ஆற்றில் புதிய பாலங்கள் கட்டும் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

தாம்பரம்,

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது புறநகர் பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே இந்த பாதிப்புக்கு காரணம்.

இதனையடுத்து வரும் காலங்களில் இதுபோல் நிகழாமல் இருக்க அடையாறு ஆற்றையொட்டிய ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்தது. பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன.

அடையாறு ஆறு தொடங்கும் பகுதியில் இருந்து தாம்பரம் கிஷ்கிந்தா சாலை வரை உள்ள பாலங்கள் சிறியதாக இருப்பதால் மழைக்காலங்களில் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது.

இதையடுத்து அந்த இடங்களில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்து, அங்கு பெரிய அளவில் புதிய பாலங்களை கட்ட நடவடிக்கை எடுத்தார்.

ரூ.10 கோடியே 10 லட்சத்தில்

இந்த பணிகளை விரைவாக செய்வதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியது. அதனை தொடர்ந்து ஆதனூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர், திருநீர்மலை ஆகிய 4 இடங்களில் அடையாறு ஆற்றில் ரூ.10 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலங்கள் கட்ட நெடுஞ்சாலை துறை முடிவு செய்தது.

அதன்படி பெருங்களத்தூர் சமத்துவ பெரியார் நகர் அருகே தாம்பரம்-சோமங்கலம் சாலையில் ரூ.3 கோடியே 26 லட்சத்திலும், வரதராஜபுரத்தில் முடிச்சூர்-மணிமங்கலம் நெடுஞ்சாலையில் ரூ.2 கோடியே 50 லட்சத்திலும், திருநீர்மலையில் பல்லாவரம்-திருமுடிவாக்கம் சாலையில் ரூ.2 கோடியே 63 லட்சத்திலும், ஆதனூரில் ரூ.1 கோடியிலும் புதிய பாலங்கள் கட்டப்படுகின்றன.

இதில் தற்போது ஆதனூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையொட்டி அந்த பகுதிகளில் தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விரைந்து முடிக்க கோரிக்கை

மழை காலத்தில் இந்த தற்காலிக சாலைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் தங்கு தடையின்றி தண்ணீர் செல்லவும் ஏதுவாக சாலைகளில் ராட்சத குழாய்களும் அமைக் கப்பட்டு இருக்கின்றன.

மழை காலம் தொடங்க இருப்பதால், பாலங்கள் கட்டும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என சென்னை புறநகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “பாலம் கட்டும் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாற்று பாதையில் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்படும். மழை காலத்தில் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காத அளவிற்கு பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகிறது” என்றனர்.

Next Story