18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தபால்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்


18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தபால்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 25 Sep 2018 9:45 PM GMT (Updated: 25 Sep 2018 9:38 PM GMT)

18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் நேற்று தபால்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல், 


கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்ட நிலுவை தொகைக்கான கணக்கீடுமுறை மாற்றப்பட வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பை ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். ஓராண்டிற்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். இந்த விடுப்பினை தனது பணிக்காலத்தில் 180 நாட்கள் வரை சேமித்து வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் குழந்தைக்கு கல்விப்படியாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். தனி நபர் மட்டுமே பணியாற்றும் கிளை அஞ்சலகங்களை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணியாற்றும் கிளை அஞ்சலகங்களாக தரம் உயர்த்த வேண்டும்,

என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இதில் தபால்துறை ஊழியர்கள், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்துக்கு கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் கோட்ட தலைவர் வெள்ளையன் தலைமை தாங்கினார். இதில் கோட்ட செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ், ஈஸ்வரன், கிளை செயலாளர்கள் ராமச்சந்திரன், சம்பத்குமார், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி சென்னையிலும், 10-ந் தேதி புதுடெல்லியிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Next Story