திருடிய பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு: கொள்ளையன் சாவு


திருடிய பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு: கொள்ளையன் சாவு
x
தினத்தந்தி 26 Sept 2018 3:45 AM IST (Updated: 26 Sept 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் அருகே திருடிய பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் கூட்டாளிகள் தாக்கியதில் காயமடைந்த கொள்ளையன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வேப்பூர், 


வேப்பூர் கூட்ரோடு அருகே சேலம் சாலையோரம் வனப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வேப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர், சிவகங்கை மாவட்டம் ஓட்டகுளம் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் ராஜமாணிக்கம் (வயது 35) என்பதும், இவர் வழிப்பறி, திருட்டு போன்ற பல்வேறு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ராஜமாணிக்கத்தை சிகிச்சைக்காக அவரது தாய் ஜெயாவிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் ஜெயா, தனது மகனை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜமாணிக்கம் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பான புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜமாணிக்கம் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து பல இடங்களில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு திருடிய பணம், பொருட்களை பிரித்து கொள்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று வேப்பூர் பகுதியில் திருடிய பணத்தை பங்கு பிரிப்பதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜமாணிக்கத்தை அவரது கூட்டாளிகள் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ராஜ மாணிக்கத்தை கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். திருடிய பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறில் கொள்ளையனை கூட்டாளிகள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story