முதியோர் உதவித்தொகை வழங்காததை கண்டித்து சத்தி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
முதியோர் உதவித்தொகை வழங்காததை கண்டித்து சத்தி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்துக்கு நேற்று காலை 11 மணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நாகராஜ் மற்றும் போலீசார், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், கடந்த 6 மாதமாக சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் ஒன்றியத்தில் உள்ள முதியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை.
மேலும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று கூறினார்கள்.
அதற்கு அதிகாரிகள் கூறுகையில், முதியோர் உதவித்தொகை வழங்குவது குறித்து மேல் அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 40 பேருக்கு உடனடியாக முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மதியம் 12.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை கேட்டு மீண்டும் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.