எதிர்கால தலைமுறையின் நலனுக்காக நேர்மையாக வாழ வேண்டும் - நடிகை கவுதமி பேட்டி


எதிர்கால தலைமுறையின் நலனுக்காக நேர்மையாக வாழ வேண்டும் - நடிகை கவுதமி பேட்டி
x
தினத்தந்தி 27 Sept 2018 4:45 AM IST (Updated: 26 Sept 2018 10:28 PM IST)
t-max-icont-min-icon

எதிர்கால தலைமுறையினரின் நலனை கருத்தில் கொண்டு நாம் நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் வாழ வேண்டும் என புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வுக்காக தொண்டு நிறுவனம் தொடங்கி உள்ள நடிகை கவுதமி கூறினார்.

விருதுநகர்,

விருதுநகர் வி.வி.வி. பெண்கள் கல்லூரியில் மாணவிகள் இடையே புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு குறித்து பேசிய நடிகை கவுதமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

எதிர்கால தலைமுறையினரின் நலனை கருத்தில் கொண்டாவது நாம் நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் வாழ வேண்டும். குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள், மது உள்ளிட்ட போதை பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குட்கா போன்ற பொருட்களுக்கு அரசு தடை விதித்து இருப்பது வரவேற்க தக்க வி‌ஷயம். ஆனால் அதற்கு அடிமையானவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் எங்கும் கிடைக்கும் என்று தேடி செல்லும் நிலை இருந்து வருகிறது. அரசு தடை விதிப்பதால் மட்டும் புகையிலை பொருட்களை ஒழித்து விட முடியாது. தாமாக முன் வந்து புகையிலை பொருட்கள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு பொருளுக்கு தேவை இல்லை என்றால் அப்பொருள் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்படும். எனவே புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படுமானால் உற்பத்தி நின்றுவிடும்.

இயற்கையாக உற்பத்தியாகும் நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, கடல் உப்பு, போன்ற பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும். ரேசன் கடைகளிலும் அரசு இம்மாதிரியான பொருட்களை விற்பனை செய்ய முன்வர வேண்டும். பாஸ்புட் உணவு வகைகளை உண்பது தவிர்க்கப் பட வேண்டும். ஓரு காலத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சொல்வதற்கு கூட கூச்சப்பட்டு தனக்கு ஒரு பிரச்சினை இருப்பதாக கூறுவார்கள். தற்போது விழிப்புணர்வு மூலம் புற்றுநோய் பாதிப்பு உள்ளது என சொல்ல முன் வந்துள்ளனர். என்னிடம் இது பற்றி ஆலோசனை கேட்பவர்களுக்கு தகுந்த நிபுணர்களிடம் சென்ற ஆலோசனை பெற பரிந்துரைப்பேன். புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாது என்பது அல்ல. வாயில் ஏற்படும் புற்றுநோயிக்கு புகையிலை பொருட்களை பயன்படுத்துவதே காரணம் ஆகும். நாம் நேர்மையாக வும், ஒழுக்கமாகவும் வாழ்ந்தால் தான் நாம் பார்க்க முடியாத நமது 4–வது, 5–வது தலைமுறைக்கும் பாதிப்பு ஏற்படாது. இதற்காகவே அனைத்து தரப்பினரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த நான் தொண்டு நிறுவனம் மூலம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன். பாராளுமன்ற தேர்தல் வரும் போது தேவைப்பட்டால் நியாமான கருத்துக்களை முன் வைத்து பிரசாரம் மேற்கொள்வேன். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.


Next Story