தூக்கில் பிணமாக தொங்கிய மாணவி: உறவினர்கள் மறியல்
தேனியில், தூக்கில் பிணமாக தொங்கிய மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
தேனி,
தேனி அல்லிநகரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. அவருடைய மனைவி ஜெயா (வயது 40). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் ராகவி (12). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இவருடைய பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். ராகவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்தநிலையில் அவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் கிடைத்து ஜெயா அங்கு வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அல்லிநகரம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் ராகவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்டதாக, அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராகவியின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் குவிந்து விட்டனர்.
சாவில் மர்மம் இருப்பதாகவும், அவருடைய உடலில் காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டு இருக்கலாம் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்கு 3 நாட்கள் ஆகும் என்று போலீஸ் தரப்பில் கூறியதாக தெரிகிறது.
இதனையடுத்து ராகவியின் உறவினர்கள், தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், செங்கதிர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அருந்தமிழரசு, ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் வைகை காமராஜ், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
முற்றுகையிட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து சிலரை மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்வதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். இதையடுத்து மாணவியின் தந்தை ராஜா, மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், தனது மகள் உடலிலும், காலிலும் காயங்கள் உள்ளன. காலில் ஊசியால் குத்தியது போல் ஏராளமான காயங்கள் உள்ளன. எனவே அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம். கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் அதே பகுதியை சேர்ந்த சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ராகவியின் உடலை வாங்க போவதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தேனி அல்லிநகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story