புறக்காவல் நிலையம் அமைக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
திண்டுக்கல் கிழக்கு மரியாதபுரத்தில் கல்லறைகளில் சிலுவைகள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து புறக்காவல் நிலையம் அமைக்கக்கோரி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் ஊர் மக்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தில் கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டம் உள்ளது. இங்குள்ள கல்லறைகளின் மீது சிலுவைகள் நட்டு வைத்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 20-க்கும் மேற்பட்ட கல்லறைகளில் இருந்த சிலுவைகள் உடைக்கப்பட்டு இருந்தன. சில கல்லறைகளில் இருந்து சிலுவைகள் பிடுங்கி வீசப்பட்டு இருந்தன.
இதை கண்டித்து அந்த பகுதியில் கிறிஸ்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தாசில்தார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிலுவைகளை உடைத்தவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கிறிஸ்தவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட கல்லறைகளில் சிலுவைகள் உடைக்கப்பட்டு இருப்பதால் கும்பலாக சேர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும் மரத்திலான சிலுவைகள் தீவைத்து எரிக்கப்பட்டு இருந்தன. எனவே, ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்பட்டுள்ளதாக போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இதையடத்து அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். எனினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் கிழக்கு மரியநாதபுரம் ஊர் நிர்வாக பேரவை சார்பில் பங்குதந்தை மார்ட்டின் தலைமையில் ஊர் நிர்வாகிகள், தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், கிழக்கு மரியநாதபுரம் பகுதி மக்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் மனு கொடுத்தனர்.
அதில், கிழக்கு மரியநாதபுரம் கல்லறை தோட்டத்தில் கல்லறைகளை இடித்து, சிலுவைகளை உடைத்துள்ளனர். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நிகழ்வு நடந்துள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கல்லறை தோட்டத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்து, மின்விளக்கு மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்து தரவேண்டும்.
கிழக்கு மரியநாதபுரத்தில் புறக்காவல் நிலையம் அமைத்து மக்கள் அமைதியாக வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story