ஏர்வாடி அருகே சூறைக்காற்றில் வாழைகள் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
ஏர்வாடி அருகே சூறைக்காற்றில் வாழைகள் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த வாழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏர்வாடி,
ஏர்வாடி அருகே சூறைக்காற்றில் வாழைகள் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த வாழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாழைகள் சேதம்
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி, பெரியகுளம் பத்துக்காடு, மலையடிபுதூர், ராஜபுதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஆயிரக்கணக்கில் ஏத்தன் வகை வாழைகளை பயிரிட்டு இருந்தனர். மேலும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களையும் பயிரிட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் பயிரிடப்பட்டு இருந்த 6 மாதங்களே ஆன ஏராளமான வாழைகள், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால் வாழை, நெற்பயிர்களை பயிரிட்டு இருந்தன விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ‘நாங்கள் வங்கிகளில் கடன் வாங்கியும், தங்க நகைகளை அடகு வைத்தும் விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில் சூறைக்காற்று, கனமழையால் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள், நெற்பயிர்கள் சேதமடைந்து உள்ளன. இதனால் எங்களுக்கு ஏராளமான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே விவசாய கடன் மற்றும் நகைக்கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் சேதமடைந்த வாழை, நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்‘ என்றனர்.
Related Tags :
Next Story