கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பி.எஸ்.என்.எல். அதிகாரி பலி
கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பி.எஸ்.என்.எல். அதிகாரி பலியானார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பி.எஸ்.என்.எல். அதிகாரி பலியானார்.
பி.எஸ்.என்.எல். காசாளர்
கோவில்பட்டி சீனிவாச நகரைச் சேர்ந்தவர் செண்பக செல்வராஜ் (வயது 58). இவர் கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் காசாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று மதியம் தனது வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு, மோட்டார் சைக்கிளில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
கோவில்பட்டி எட்டயபுரம் ரோடு, மாதாங்கோவில் ரோடு சந்திப்பு பகுதியில் சென்றபோது, எதிரே கோவில்பட்டி பூரணம்மாள் காலனியைச் சேர்ந்த மகபூப் பாட்ஷா மகன் ஜானு பாட்ஷா (29) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
போலீசார் விசாரணை
இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட செண்பக செல்வராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அவருக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே செண்பக செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் ஜானு பாட்ஷா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த செண்பக செல்வராஜிக்கு பிரபா (55) என்ற மனைவியும், நந்தினி (25) என்ற மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story