தீயணைப்பு அதிகாரிகள் போல் நடித்து ஜவுளிக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்த 2 பேர் சிக்கினர்


தீயணைப்பு அதிகாரிகள் போல் நடித்து ஜவுளிக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்த 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 27 Sept 2018 3:30 AM IST (Updated: 27 Sept 2018 12:09 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் தீயணைப்பு துறை அதிகாரிகள் போல் நடித்து ஜவுளிக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்த 2 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

மதுரை,

மதுரை செல்லூரை சேர்ந்தவர் சரவணக்குமார்(வயது 50). இவர் செல்லூர் 60 அடி ரோட்டில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது கடைக்கு 2 பேர் வந்தனர். அவர்கள் தங்களை தீயணைப்புத்துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டு, தங்கள் கடையில் தீயணைப்பு சாதனங்கள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வந்துள்ளதாக தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் ஆய்வு செய்துவிட்டு கடையில் உள்ள தீயணைப்பு சாதனங்கள் தரமானதாக இல்லை என்றும், அதற்காக 4 ஆயிரத்து 810 ரூபாய் அபராதம் விதிக்கிறோம் என்றும் கூறியுள்ளனர். மேலும் கடை உரிமையாளரிடம் பணத்தை வாங்கி கொண்டு அதற்குரிய ரசீதுகளை கொடுத்தனர். அவர்களின் நடவடிக்கை மீதும், அவர்கள் கொடுத்த ரசீது மீதும் சந்தேகப்பட்ட சரவணக்குமார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனே செல்லூர் போலீசார் அங்கு சென்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் என்று கூறிய 2 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் வண்டியூரை சேர்ந்த வீரபத்திரன், திருமங்கலம் அருகே உள்ள அரசம்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பதும், இவர்கள் தீயணைப்பு அதிகாரிகள் போல் நடித்து போலியாக ரசீது கொடுத்து பண பறித்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபத்திரன், ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்கள் இதே போன்று வேறு எங்கும் பணம் பறிப்பில் ஈடுபட்டு உள்ளார்களா என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story