கோ–ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை; கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்
கோ–ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை,
சிவகங்கையில் கோ–ஆப் டெக்ஸ் நிறுவனம் சார்பில் தீபாவளி பண்டிகையொட்டி 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அதை சிவகங்கை ஆக்ஸ்வர்டு பள்ளி தாளாளர் சியாமளா பெற்றுக்கொண்டார்.
பின்னர் கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:– கோ–ஆப் டெக்ஸ் என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 83 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. வருகிற நவம்பர் மாதம் 6–ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கோ–ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.1கோடியே 31லட்சத்து 55ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுஉள்ளது. தற்போது நடப்பாண்டிற்கு மாவட்டத்திற்கு ரூ.1கோடியே 84லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. இந்த ஆண்டு உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
மேலும் பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் வகையில் செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கடி சேலைகள் ஆகியவைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கோ–ஆப்டெக்ஸ் நிறுவன மேலாளர்கள் பழனிச்சாமி, செல்வராஜ் மற்றும் சிவகங்கை கிளை மேலாளர்(பொறுப்பு) முல்லைக்கொடி, சிவகங்கை தாசில்தார் ராஜா, சிவகங்கை மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.