சரக்கு வேன் கவிழ்ந்து மூதாட்டி பலி
தேன்கனிக்கோட்டை அருகே சரக்கு வேன் கவிழ்ந்து மூதாட்டி உயிரிழந்தார். மேலும் 33 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கரகூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மா (வயது 65). இவர் உள்பட 43 பேர் நேற்று காலை ஒரு சரக்கு வாகனத்தில் ஒசட்டியில் உள்ள விவசாய நிலத்திற்கு பூ பறிக்கும் வேலைக்காக சென்றனர். அங்கு வேலையை முடித்துவிட்டு மீண்டும் அனைவரும் அதே சரக்கு வாகனத்தில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
தடிக்கல் அண்ணாநகரில் உள்ள ஒரு வளைவில் சரக்கு வேன் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்தம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் சரக்குவேனில் பயணம் செய்த 33 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்தம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்குவேன் கவிழ்ந்து மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story