விவசாய கடனில் பயிர் காப்பீட்டு தொகையை பிடித்தம் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு


விவசாய கடனில் பயிர் காப்பீட்டு தொகையை பிடித்தம் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 27 Sept 2018 4:15 AM IST (Updated: 27 Sept 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

விவசாய கடனில் இருந்து பயிர் காப்பீட்டு தொகையை பிடித்தம் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூரில் தேயிலை, காபி, குறுமிளகு, இஞ்சி, கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. மேலும் நெல், வாழை, மரவள்ளிக்கிழங்கு மற்றும் மலைக்காய்கறி விவசாயமும் நடக்கிறது. மழை அல்லது வறட்சியால் ஏற்படும் பயிர் சேதத்தை ஈடு செய்ய விவசாயிகள் வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்குக்கு பயிர் காப்பீடு செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் பெய்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இன்றி வறட்சி நிலவியது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். கூடலூர் பகுதியில் கடந்த 3 மாதங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. மழை வெள்ளத்தில் வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை நேரில் சென்று புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. தற்போது கூடலூர் பகுதியில் மழை வெள்ளத்தால் வாழைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர். நடப்பு ஆண்டில் விவசாய பணிகளை தொடங்க வேளாண்மை துறை சார்பில் கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதில் இருந்து பயிர் காப்பீட்டு தொகையை பிடித்தம் செய்து கடன் வழங்குவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து உள்ளனர். மேலும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கூடலூர் உழவர் உற்பத்தியாளர் குழு செயலாளர் சிவதேவன் கூறியதாவது:–

வாழை, மரவள்ளிக்கிழங்குக்கு மட்டுமே காப்பீடு செய்ய முடியும். காபி, குறுமிளகு, இஞ்சி உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்ய முடியாது. இதனால் வாழை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக வறட்சியால் கருகி போன வாழைகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்க வில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தும் பலன் இல்லை. தற்போது ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை வங்கிகளில் விவசாய கடன் வழங்கப்படுகிறது. அதில் ஏக்கருக்கு ரூ.3,200 காப்பீடு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.

பயிர் சேதம் இல்லையெனில் செலுத்திய தொகை விவசாயிகளுக்கு திரும்ப வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர். ஆனால் அந்த தொகையையும் தரவில்லை. இது தவிர காட்டுப்பன்றி, காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தினால் காப்பீட்டு தொகை தருவது இல்லை. பல லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம் அடைந்த பயிர்களுக்கு வனத்துறை சார்பில் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது. இவ்வாறு ஆண்டுதோறும் விவசாயிகள் காப்பீட்டு தொகையை அரசுக்கு வீணாக செலுத்தி வருகின்றனர். எனவே விவசாய கடன் வழங்கும்போது காப்பீடு தொகையை பிடித்தம் செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story