நோய்கள் வரும் முன் நம்மை காப்பதில் துப்புரவு பணியாளர்களின் பங்கு மகத்தானது அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு


நோய்கள் வரும் முன் நம்மை காப்பதில் துப்புரவு பணியாளர்களின் பங்கு மகத்தானது அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
x
தினத்தந்தி 27 Sept 2018 4:30 AM IST (Updated: 27 Sept 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

நோய்கள் வரும் முன் நம்மை காப்பதில் துப்புரவு பணியாளர்களின் பங்கு மகத்தானது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டையில் துப்புரவு பணியாளர்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுக்கோட்டை நகராட்சியில் 286 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் குடியிருக்கும் வகையில் மச்சுவாடி மற்றும் சந்தைப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஏற்கனவே குடியிருப்புகள் கட்டப்பட்டு துப்புரவு பணியாளர்கள் வசித்து வருகின்றனர். தற்போது கூடுதலாக சந்தைப்பேட்டையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 30 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் பொதுமக்களின் நலனுக்காக சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை நகராட்சி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் தூய்மையாக இருப்பதற்கு துப்புரவு பணியாளர்கள் சிறந்த முறையில் தங்களது பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் நோய்கள் வரும் முன் நம்மை காப்பதில் துப்புரவு பணியாளர்களின் பங்கு மகத்தானது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சி குமார், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் பாஸ்கர் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம், தமிழ்நாடு காட்டு நாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தினர் சாதி சான்றிதழ் கேட்டு மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட அமைச்சர் மனு குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story