தந்தை பெரியார் அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்யப்படும் - அனந்தராமன் எம்.எல்.ஏ. உறுதி
தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்று அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. கூறினார்.
அரியாங்குப்பம்,
மணவெளி தொகுதியில் உள்ள தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, இரவு நேரத்தில் மர்ம ஆசாமிகள் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து மதுகுடித்துவிட்டு பாட்டில்களை அங்கே போட்டுவிட்டு செல்கிறார்கள் என்று தொகுதி எம்.எல்.ஏ.வான அரசு கொறடா அனந்தராமனிடம் புகார் கூறப்பட்டது.
அதன்பேரில் அனந்தராமன் எம்.எல்.ஏ. நேற்று காலை தந்தை பெரியார் அரசு பெண்கள் பள்ளிக்கு திடீரென்று சென்றார். பள்ளியை சுற்றி பார்த்து, ஆய்வு செய்தார். அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் குழாய்கள் உடைந்தும், மதுபாட்டில்கள், குப்பைகள் குவிந்தும் கிடந்தன. இதை பார்த்த அவர், அங்கிருந்த அதிகாரிகளிடம் மதுபாட்டில்கள், குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.
மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் கல்வித்துறை மூலம் செய்துகொடுக்கப்படும். பள்ளிக்கு இரவு நேர காவலாளிகள் நியமிக்கவும், பள்ளி வளாகத்தின் உள்புறம், வெளிப்புறங்களில் மின் விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.