28 வயது காதலியுடன் வீட்டுக்கு வந்த சிறுவன்


28 வயது காதலியுடன் வீட்டுக்கு வந்த சிறுவன்
x
தினத்தந்தி 27 Sept 2018 3:45 AM IST (Updated: 27 Sept 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

விவாகரத்து ஆன பெண்ணுடன் மலர்ந்த பொருந்தா காதலில் சிக்கிய 17 வயது சிறுவன், காதலியை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார். இதனால், பெற்றோர் கண்டித்ததால் 2 பேரும் விஷம் தின்றதாக நாடகமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூர், 


காதலுக்கு கண்கள் இல்லை என்பார்கள். இதற்கு சாதி, மத பேதமும் கிடையாது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு திருமணங்கள் நடந்து வருகிறது. ஆனால் சமீப காலத்தில் நடக்கிற சில நிகழ்வுகளை பார்க்கும்போது காதலுக்கு வயதும் தடை இல்லை என்றே தோன்றுகிறது.

வயதை மீறிய பொருந்தாக் காதல், தற்போது மலர்ந்து கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியருடன் காதல் வயப்பட்டு, 20 வயது மாணவி அவரை திருமணம் செய்து கொண்டார். ராமேசுவரத்தில் தங்கி இருந்த அவர்களை நேற்று முன்தினம் போலீசார் பிடித்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டை சேர்ந்த 17வயது சிறுவன், கோவையை சேர்ந்த 28 வயதான பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்த விவரம் வருமாறு:-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு ஓட்டல் உரிமையாளருக்கு 28 வயதில் மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி சில ஆண்டுகளில் விவாகரத்து ஆனதால், தனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் தனது தந்தையுடன் சேர்ந்து ஓட்டலை கவனித்து வந்தார். அதே ஓட்டலில், வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் தங்கியிருந்து வேலை செய்து வந்தான்.

இதனால் அந்த சிறுவனுக்கும், ஓட்டல் உரிமையாளரின் மகளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர், இது காதலாக மாறியது. பொருந்தா காதல் என்று அறியாத அவர்கள் 2 பேரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். தங்களது காதலை இருதரப்பு பெற்றோரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் ஓட்டலை விட்டு வெளியேறினர்.

பின்னர், அங்கிருந்து இருவரும் திருப்பூருக்கு சென்று ஒரு நூற்பாலையில் சில நாட்கள் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதற்கிடையே, தனது மகளை 17 வயது சிறுவன் கடத்திச்சென்றதாக மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஓட்டல் உரிமையாளர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.இதை அறிந்த காதல் ஜோடி, திருப்பூரில் இருந்து வெளியேறினர். பின்னர், நேற்று காலை எரியோட்டில் உள்ள சிறுவனின் வீட்டுக்கு இருவரும் வந்துள்ளனர். தங்களது மகன் ஒரு பெண்ணுடன் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இருவரையும் கண்டித்தனர். அப்போது, இருவரும் அரளி விதைகளை (விஷம்) தின்றுவிட்டதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்களை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர்கள் அரளி விதையை சாப்பிடவில்லை என்று தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் அரளி விதையை தின்றதாக நாடகமாடி உள்ளனர்.இதற்கிடையே காதல் ஜோடி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருப்பதை அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர், இருவரையும் மேட்டுப்பாளையத்துக்கு அழைத்து சென்றனர். அந்த சிறுவன் திருமண வயதை எட்டாததால் அவனுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அந்த பெண்ணை காப்பகத்தில் அல்லது பெற்றோரிடம் அனுப்பி வைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 28 வயது காதலியுடன், 17 வயது சிறுவன் விஷம் தின்றதாக நாடகமாடிய சம்பவம் எரியோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story