புதுவை– நாகர்கோவில் அரசு பஸ் திடீர் நிறுத்தம் பொதுமக்கள் ஏமாற்றம்


புதுவை– நாகர்கோவில் அரசு பஸ் திடீர் நிறுத்தம் பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 27 Sept 2018 3:45 AM IST (Updated: 27 Sept 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

அரசு சாலை போக்குவரத்து கழகம் சார்பில் புதுவை–நாகர்கோவில் இடையே இயக்கப்பட்ட பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஊருக்கு செல்ல விரும்பிய பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

புதுச்சேரி,

அரசு சாலை போக்குவரத்து கழகம் சார்பில் வெளி மாநிலங்களுக்கு அதாவது பெங்களூரு, திருப்பதி, நாகர்கோவில், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நெடுந்தூர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புதுவையில் வசிக்கும் பொதுமக்களுக்கு இந்த பஸ்கள் வசதியாக இருந்து வந்தன. இந்த நிலையில் நாகர்கோவில் வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ் மட்டும் திடீரென்று நிறுத்தப்பட்டு விட்டது.

தற்போது காலாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளநிலையில் புதுவையில் வசித்துவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக இந்த பஸ்சில் பயணம் செய்ய ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் இந்த வழித்தடத்தில் இயங்கி வந்த அரசு பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டு விட்டது.

இதுதெரியாமல் இந்த பஸ்சை நம்பி பயணம் செய்வதற்காக சென்றபோது பஸ் நிறுத்தப்பட்டு விட்டதை அறிந்து பயணிகள் ஏமாற்றமடைந்தனர். வழக்கமாக பயணம் செய்ய வந்தவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

இதுகுறித்து சாலை போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, பராமரிப்பு செய்யப்பட்டு போக்குவரத்து அதிகாரிகளின் ஒப்புதலுக்கு பஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

புதுவை சாலை போக்குவரத்து கழகத்தில் ஏராளமான பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றை மாற்று பஸ்சாக புதுவை– நாகர்கோவில் இடையே இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சாலை போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘புதுவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ் பராமரிப்பு பணி முடிந்து போக்குவரத்து அலுவலக ஒப்புதலுக்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கு ஒப்புதல் கிடைத்து விடும். அதன்பின் இந்த வழித்தடத்தில் வழக்கம்போல் பஸ் இயக்கப்படும்’ என்றார்.


Next Story