நஷ்டத்தில் இயங்கும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது - கவர்னர் கிரண்பெடி


நஷ்டத்தில் இயங்கும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது - கவர்னர் கிரண்பெடி
x
தினத்தந்தி 27 Sept 2018 5:15 AM IST (Updated: 27 Sept 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

நஷ்டத்தில் இயங்கும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் கிரண்பெடி கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி,

முதல்–அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு கவர்னர் கிரண்பெடி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரியில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிப்பதில் அதிக கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளோம். பல ஆண்டுகளாக இந்த வி‌ஷயத்தில் நிதியை பரிசீலனை செய்யாமல் கொடுத்துள்ளனர். இதனால் அந்த நிறுவனங்களில் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கொல்லைப்புறம் வழியாக அதிக அளவில் ஆட்கள் நியமனம் செய்துள்ளனர்.

இதனால் சம்பளத்திற்கே அதிக நிதி செலவிடுவதை தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டியும் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. குறிப்பிட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி அந்த பணிக்காக செலவு செய்யப்படாமல் பெரும்பாலும் சம்பளத்திற்கே மாற்றப்பட்டுள்ளன.

தொழில் ஒப்புதல் இல்லாமல் செயல்பட்டதால் பொதுத்துறை நிறுவனம், கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் அடிப்படை திறன் இல்லாமல் போய்விட்டன. பெரும் நஷ்டம் ஏற்பட்டதற்கு அப்போதைய அரசியல் தலைமையும், நிர்வாக தலைமையும் தான் காரணம். கடன் சுமை அதிகரித்து அதை திருப்பிச் செலுத்த முடியாமல் நஷ்டத்தில் இயங்கும் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கூட தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் நிதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் முதலில் அதை ஆய்வு செய்து கேள்விகள் கேட்கப்படும். அதன்பின் பரிசீலனை செய்து செயல்பாட்டின் அடிப்படையிலேயே நிதி வழங்கப்படும். பொதுமக்களின் பணமே இவர்களுக்கு நிதியாக தரப்படுகிறது. அதில் மக்களுக்கும் பயனும் கிடைக்க வேண்டும். நிதியை மாற்றம் செய்யவோ, கொல்லைப்புறமாக ஆட்களை நியமிக்கவோ கூடாது. நிதி மேலாண்மை பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அதிகாரிகள் தலைமை பொறுப்பை ஏற்று நடக்கவேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படுவோர் ஓய்வு பெற்றால் அவர்களின் ஓய்வு பலனை அனுமதிக்க முடியாது. ஓய்வூதியம் தேவை என்றால் சரியில்லாதவற்றையும், தவறுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story