வளசரவாக்கத்தில் துணிக்கடை அதிபர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை


வளசரவாக்கத்தில் துணிக்கடை அதிபர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 27 Sept 2018 4:15 AM IST (Updated: 27 Sept 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

வளசரவாக்கத்தில் துணிக்கடை அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகள், ரூ.1½ லட்சம் மற்றும் 2 விலை உயர்ந்த செல்போன்களை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி, 

சென்னை வளசரவாக்கம், சுரேஷ் நகர் 3-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கோபிநாத் (வயது 38). இவர், சென்னை மயிலாப்பூர் மற்றும் காஞ்சீபுரத்தில் சொந்தமாக துணிக்கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி சாய்பிரியா (32).

இவர்களது மகனுக்கு காஞ்சீபுரத்தில் உள்ள கோவிலில் மொட்டை அடித்து, காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோபிநாத், தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் காஞ்சீபுரம் சென்றுவிட்டார்.

30 பவுன் நகை கொள்ளை

நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் அனைத்தும் தரையில் சிதறிக்கிடந்தன.

பீரோவில் சோதனை செய்தபோது, அதில் வைத்து இருந்த 30 பவுன் நகைகள், 2 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் ரூ.1½ லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்

காவலாளியிடம் விசாரணை

அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு காவலாளி ஒருவர் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்படி இருந்தும் கொள்ளை நடந்தது எப்படி? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஊருக்கு செல்வதற்கு முன்பாக கோபிநாத்தின் குடும்பத்தினர், தேவையான நகைகளை எடுத்து வைத்து விட்டதாகவும், மீதமுள்ள நகைகள் வீட்டின் பீரோவில் இருப்பதாகவும் காவலாளி அருகில் இருக்கும்போதே பேசி உள்ளனர்.

எனவே உண்மையிலேயே காவலாளிக்கு தெரியாமல் கொள்ளையர்கள் கோபிநாத் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தனரா? அல்லது காவலாளியே ஆட்களை வைத்து கொள்ளையில் ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் காவலாளியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story