ஜீவனாம்சம் வழங்கக்கோரி திருவள்ளூர் கோர்ட்டு வளாகத்தில் மகனுடன் பெண் தர்ணா போராட்டம்


ஜீவனாம்சம் வழங்கக்கோரி திருவள்ளூர் கோர்ட்டு வளாகத்தில் மகனுடன் பெண் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2018 3:45 AM IST (Updated: 27 Sept 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

ஜீவனாம்சம் வழங்கக்கோரி திருவள்ளூர் கோர்ட்டு வளாகத்தில் மகனுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருவள்ளூர், 

திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று பெண் ஒருவர் தனது மகனுடன் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

என்னுடைய பெயர் மணிமேகலை (வயது 48). எனது ஊர் வேலூர் மாவட்டம் ஆலங்காயம் கிராமம். என்னுடைய மகன் வேல்முருகன்(17) கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டில் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்த டிரைவரான மகேந்திரன் என்பவரை நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை என்னிடம் மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார்.

முதல் மனைவியுடன்

திருமணம் ஆனதில் இருந்து ஒரு ஆண்டு மட்டுமே என்னுடன் குடும்பம் நடத்தி வந்தார். பின்னர் என்னை அந்த வீட்டில் இருந்து காலி செய்து பட்டாபிராமில் உள்ள வீட்டில் குடித்தனம் வைத்தார். பின்பு அவர் எங்களை விட்டு பிரிந்து முதல் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். பலமுறை அவரை அணுகியும் என்னிடம் குடும்பம் நடத்த வரவில்லை. இதனால் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் அவதிப்பட்டு வந்தேன். தற்போது நான் ரெயில்களில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்தி வருகிறேன். இதில் வரும் வருமானம் எங்களுக்கு போதுமானதாக இல்லை.

இதைத்தொடர்ந்து நான் எனது கணவரை அணுகி எனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நான் திருவள்ளூரில் உள்ள மகளிர் போலீஸ நிலையத்தில் புகார் அளித்தேன்.

ஜீவனாம்சம் கிடைக்க நடவடிக்கை

இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இருப்பினும் எனக்கு இது நாள் வரை கோர்ட்டு மூலம் ஜீவனாம்சம் கிடைக்கவில்லை. எனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறேன். ஆனால் கோர்ட்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நான் வேறு வழியின்றி எனக்கு ஜீவனாம்சம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி எனது மகனுடன் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு அமர்ந்து சுட்டெரிக்கும் வெயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மணிமேகலையையும் அவரது மகன் வேல்முருகனையும் நீதிபதியிடம் அழைத்து சென்றனர்.

அவர்களிடம் நீதிபதி ஜீவனாம்சம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கோர்ட்டு வளாகத்தில் 2 மணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்ட அவர் தன்னுடைய மகனுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Next Story