ஆர்.கே.பேட்டை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை


ஆர்.கே.பேட்டை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
x
தினத்தந்தி 27 Sept 2018 4:15 AM IST (Updated: 27 Sept 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.பேட்டை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை அருகே அய்யனேரி காலனியை சேர்ந்தவர் பழனி (வயது 50). இவரது மகன் சுதாகர் (28). சோளிங்கரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலூர் மாவட்டம் நெமிலி தாலுகா கோடம்பாக்கம் காலனியை சேர்ந்த வரதராஜன் (45) என்பவரது மகள் கலையரசி (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில் சுதாகரின் பெற்றோருக்கு விருப்பம் இல்லை. கலையரசியின் பெற்றோர் வேறு வழியின்றி சமாதானம் அடைந்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களது திருமணத்தை அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.

தற்கொலை

இந்த நிலையில் சுதாகரின் பெற்றோர் வரதட்சணை கேட்டு கலையரசியை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கலையரசியின் தந்தை வரதராஜன் தன்னால் முடிந்த நகைகளை கொடுத்ததாக தெரிகிறது.

அதில் திருப்தி அடையாத அவர்கள் மேலும் வரதட்சணை கேட்டு கலையரசிக்கு தொல்லை கொடுத்தனர். இதற்கு காதல் கணவனும் உடந்தை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கலையரசி வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசில் புகார்

இது குறித்து அவரது தந்தை வரதராஜன் ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தனது மகளின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமையே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருத்தணி ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story