விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய அலுவலகம் எரிப்பு மர்ம நபர்களை கைது செய்யக்கோரி மறியல்


விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய அலுவலகம் எரிப்பு மர்ம நபர்களை கைது செய்யக்கோரி மறியல்
x
தினத்தந்தி 27 Sept 2018 2:41 AM IST (Updated: 27 Sept 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய அலுவலகத்தை தீ வைத்து எரித்த மர்மநபர்களை கைது செய்யக்கோரி மறியல் போராட்டம் நடந்தது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த கன்னிவாக்கம் கிராமத்தில் உள்ள அண்ணாநகர் பஸ் நிறுத்தம் அருகே சாலை ஒரமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அலுவலகம் கடந்த மாதம் 17-ந்தேதி அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளில் திறக்கப்பட்டது. கூரை அலுவலகத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தீவைத்து எரித்து உள்ளனர். வழக்கம் போல் நேற்று காலை கட்சி அலுவலகத்திற்கு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஒன்றிய துணை செயலாளர் எஸ்.வெங்கடேசன் வந்த போது கட்சி அலுவலகம் முழுவதும் எரிந்து நாசமாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து கருகி கிடந்தது. இது குறித்து வெங்கடேசன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மறியல் போராட்டம்

அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் செங்கை தமிழரசன், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி செயலாளர் கேது என்கிற தென்னவன், நிர்வாகிகள் கோ.முத்தையா, சி.வேதகிரி, கோ.மணிமாறன் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கட்சி அலுவலகத்தை எரிந்த மர்ம நபர்களை உடனே கைது செய்யக்கோரி கன்னிவாக்கம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்துச்சென்றனர். இதனால் சிறிது நேரம் கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story