உறவினரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு 13 ஆண்டுகள் சிறை காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு
உறவினரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு காஞ்சீபுரம் கோர்ட்டு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலத்தை அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்தவர் டேவிட் (வயது 38). அவரது மனைவி முத்துலட்சுமி (30). இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த அப்பு என்கிற லோகநாதன் (28). சம்பவத்தன்று அப்பு விஷம் குடித்து சென்னை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது டேவிட், அவரது மனைவி முத்துலட்சுமி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அப்புவை பார்த்தனர். அப்போது டேவிட், அப்புவிடம் ’சர்ச்சில் ஜெபம் செய்தால் உன் உடல் சரியாகிவிடும் என்று கூறினார். சிகிச்சை முடிந்து அப்பு, டேவிட் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். 19.2.2013 அதிகாலை 4 மணிக்கு டேவிட் வீட்டில் இருந்து அப்பு வெளியே புறப்பட்டார். அப்போது டேவிட், அப்புவை வழிமறித்து இந்த நேரத்தில் ஏன் நீ வெளியே போகிறாய், வெளியே போகாதே என்று தடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பு, உறவினர் டேவிட்டை அங்கிருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். அவரது மனைவி முத்துலட்சுமி தடுக்க வந்தார். அவருக்கும் கத்தி குத்து விழுந்தது. இதில், டேவிட் பரிதாபமாக உயிரிழந்தார். முத்துலட்சுமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
13 ஆண்டுகள் சிறை
இது குறித்து முத்துலட்சுமி சோமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அப்புவை கைது செய்தனர். இந்த வழக்கு காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட அமர்வு கோர்ட்டு 2-ல் நடந்து வந்தது. அரசு சார்பில் அரசு வக்கீல் அய்யம்பேட்டை கே.சம்பத் ஆஜரானார்.
இந்த வழக்கை விசாரித்த காஞ்சீபுரம் அமர்வு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி குற்றம் சாட்டப்பட்ட அப்புவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், முத்துலட்சுமியை கத்தியால் குத்தி காயப்படுத்திய குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆக 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story