ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளர்கள் போராட்டம்


ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2018 2:51 AM IST (Updated: 27 Sept 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாலாஜாபாத், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடகால் கிராமத்தில் ஜப்பான் நாட்டு நிறுவனமான யமஹா மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 800 நிரந்தர தொழிலாளர்கள், 2,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், பயிற்சி தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் முறையிடப்பட்டது. ஆனால் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து தொழிலாளர் நல வாரியத்தில் மனு அளிக்கப்பட்டது. இருதரப்பினரையும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் நிர்வாகம் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.

செல்போன் கோபுரத்தில் ஏறி...

இதற்கிடையே தொழிற்சங்க நிர்வாகிகள் பிரகாஷ், ராஜமணிகண்டன் ஆகியோரை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதனையடுத்து தொழிலாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை அப்புறப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தொழிலாளர்கள் தொழிற்சாலையில் உள்ள செல்போன் கோபுரம் மற்றும் ‘கன்வேயர் பெல்ட்’ செல்லும் கம்பம், மேற்கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

உடனே சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி தலைமையில் போலீசார் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் விரைந்து வந்து தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், சி.ஐ.டி.யு. மாவட்டத்தலைவர் கண்ணன், மாவட்டச்செயலாளர் முத்துகுமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மேலும் கோரிக்கையை ஏற்கும் வரை தொழிற்சாலைக்கு வெளியே போராட்டத்தை தொடர்வது என முடிவு செய்தனர்.

Next Story