500 ரூபாய் கடனுக்காக மனைவியை அபகரித்த நண்பர் மீட்டுத்தரக் கோரி ஓட்டல் ஊழியர் போராட்டம்


500 ரூபாய் கடனுக்காக மனைவியை அபகரித்த நண்பர் மீட்டுத்தரக் கோரி ஓட்டல் ஊழியர் போராட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2018 4:30 AM IST (Updated: 27 Sept 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

ரூ.500 கடனுக்காக ஓட்டல் ஊழியரின் மனைவியை நண்பர் அபகரித்து சென்றுவிட்டார்.

பெங்களூரு, 

ரூ.500 கடனுக்காக ஓட்டல் ஊழியரின் மனைவியை நண்பர் அபகரித்து சென்றுவிட்டார். அவரிடம் இருந்து மனைவியை மீட்டுத்தரக் கோரி ஓட்டல் ஊழியர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெலகாவியில் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஓட்டலில் வேலை செய்த தம்பதி

பெலகாவி மாவட்டம் பைலஓங்கலா தாலுகா முரகிபாவி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் கோனனவர். இவருக்கும் சவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. பசவராஜ் தனது குடும்பத்துடன் வேலை தேடி பெலகாவி டவுனுக்கு வந்தார். பின்னர், அவரும், அவருடைய மனைவி சவிதாவும் கடேபஜாரில் உள்ள தனியார் ஓட்டலில் ஊழியர்களாக வேலைக்கு சேர்ந்தனர்.

இந்த ஓட்டலில் கோகாக் தாலுகா முத்தகனட்டி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் ஹூக்கேரி என்பவரும் வேலை செய்து வந்தார். ஒரே ஓட்டலில் வேலை செய்ததால் பசவராஜ், ரமேஷ் ஆகியோர் நண்பர்கள் ஆனார்கள். ரமேசுக்கு, பசவராஜூவின் மனைவி சவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

திருமணம்

இந்த நிலையில், ரமேசிடம் இருந்து பசவராஜ் ரூ.500 கடன் வாங்கினார். நீண்ட நாட்கள் ஆகியும் இந்த கடனை அவர் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அடைந்த ரமேஷ், பசவராஜூவின் மனைவி சவிதாவை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். இதற்கு பசவராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் அவர் ரமேசை தொடர்பு கொண்டு சவிதாவை அனுப்பி வைக்கும்படி கூறினார். இதை கேட்ட ரமேஷ், அவரை அவதூறாக திட்டியுள்ளார். அத்துடன், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சவிதாவை, ரமேஷ் திருமணம் செய்து கொண்டார். தற்போது ரமேஷ், சவிதாவுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

மனைவியை மீட்டுத்தர கோரிக்கை

இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற பசவராஜ், பெலகாவி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், அவர் சம்பவம் குறித்து பெலகாவி மாவட்ட கலெக்டர் ராஜப்பாவிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

அதில், ‘எனது மனைவி 2-வதாக கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் ரூ.500 கடனை திரும்ப வழங்காததால் எனது மனைவியை ரமேஷ் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். ரமேசுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவருடைய மனைவி தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டு 2-வது திருமணம் செய்து சவிதாவுடன் வாழ்ந்து வருகிறார். இதுபற்றி போலீசாரிடம் புகார் கொடுத்தால் அவர்கள் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். என் மனைவியை என்னிடம் ஒப்படைக்கும்படி ரமேசிடம் கூறினால் அவர் ஆபாசமாக திட்டுகிறார். எனவே, என் மனைவியை மீட்டு கொடுக்க வேண்டும்‘ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story