உடற்பயிற்சியாளரை கடத்தி தாக்கிய வழக்கில் கைதான நடிகர் துனியா விஜயின் ஜாமீன் மனு தள்ளுபடி


உடற்பயிற்சியாளரை கடத்தி தாக்கிய வழக்கில் கைதான நடிகர் துனியா விஜயின் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 27 Sept 2018 4:00 AM IST (Updated: 27 Sept 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

உடற்பயிற்சியாளரை கடத்தி தாக்கிய வழக்கில் கைதான நடிகர் துனியா விஜய் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு, 

உடற்பயிற்சியாளரை கடத்தி தாக்கிய வழக்கில் கைதான நடிகர் துனியா விஜய் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

துனியா விஜய் கைது

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் துனியா விஜய். இவர், தனது குடும்பத்துடன் பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 22-ந் தேதி இரவு வசந்த்நகரில் உள்ள அம்பேத்கர் பவனில் வைத்து உடற்பயிற்சியாளரான மாருதிகவுடாவுக்கும், துனியா விஜய்க்கும் இடையே மோதல் உருவானது. அப்போது மாருதிகவுடாவை காரில் கடத்திச் சென்று துனியா விஜய், அவரது நண்பர்கள் தாக்கினார்கள். இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் துனியா விஜய், பிரசாத், மணி, கார் டிரைவரான மற்றொரு பிரசாத் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்கள்.

கைதான 4 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, துனியா விஜய் உள்பட 4 பேரும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மாருதிகவுடா தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜாமீன் மனு தள்ளுபடி

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி நடிகர் துனியா விஜய் சார்பில் கடந்த 24-ந் தேதி பெங்களூரு கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அன்றைய தினம் அந்த மனு மீதான விசாரணை நீதிபதி மகேஷ் பாபு முன்னிலையில் நடைபெற்றது. அப்போது துனியா விஜய்க்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடினார். அதே நேரத்தில் துனியா விஜய்க்கு ஜாமீன் வழங்கினால், அவர் ஒரு பிரபல நடிகர் என்பதால் சாட்சிகளை அழித்து விட வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வக்கீல் வாதாடி இருந்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மகேஷ் பாபு, துனியா விஜய் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 26-ந் தேதி (அதாவது நேற்று) வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, நடிகர் துனியா விஜயின் ஜாமீன் மனு மீது நேற்று நீதிபதி மகேஷ் பாபு தீர்ப்பு கூறினார். அப்போது துனியா விஜய் சார்பில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ஜாமீன் கிடைக்காததால் நடிகர் துனியா விஜய் ஏமாற்றம் அடைந்துள்ளார். அதே நேரத்தில் துனியா விஜய் சார்பில் பெங்களூரு செசன்சு கோர்ட்டில் ஜாமீன் கோரி இன்று(வியாழக்கிழமை) மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story