அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கம் வேண்டாம்
திருப்பூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கம் வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உறுதி மொழி குழு தலைவர் ஐ.எஸ்.இன்பதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர்,
தமிழ்நாடு சட்ட பேரவையின் அரசு உறுதிமொழிக்குழுவின் ஆய்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். அரசு உறுதி மொழிக்குழுவின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஐ.எஸ்.இன்பதுரை (ராதாபுரம்), உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே.அர்ச்சுனன் (கோவை தெற்கு), ராஜா (தாம்பரம்), சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்), சுதர்சனம் (மாதவரம்), ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), நா.மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை), ஜே.கே.என்.ராமஜெயலிங்கம் (ஜெயங்கொண்டம்), அ.ராமு (குன்னூர்), சட்டமன்ற பேரவை செயலாளர் கி.சீனிவாசன், இணைச் செயலாளர் பா.சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உறுதிமொழிக்குழுவின் தலைவர் ஐ.எஸ்.இன்பதுரை பேசும் போது கூறியதாவது:-
இந்திய ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக சட்டமன்றம் திகழ்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொத்தம் 12 குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களில் சட்டமன்ற உறுதிமொழிக்குழு முக்கியமான குழுவாகும். அரசின் வளர்ச்சித்திட்டங்களுக்கு செயலாக்கம் கொடுக்கும் வகையில் சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கையின் போது சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் உறுதியளித்த பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக அரசு உறுதிமொழிக்குழு மாநிலம் முழுவதும் ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இந்த குழு ஆய்வுக்கூட்டம் மற்றும் களஆய்்வுகளை மேற்கொள்கிறது. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் மூலம் உறுத்தியளிக்கப்பட்ட 195 கேள்விகளின் மீது தமிழ்நாடு முழுவதும் சென்று இந்த ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கை சட்டப்பேரவைக்கு கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த கூட்டத்தில் 195 உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் எவ்வித சுணக்கமும் காட்டாமல் அலுவலர்கள் விரைந்து செயல்படுத்திட வேண்டும். மேலும் அரசு உறுதி மொழிக்குழுவிடம், அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் இடர்்பாடுகள் இருப்பின், அரசு அலுவலர்கள் தெளிவாக எடுத்துக்கூறுவதன் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குறைகள் களையப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, எம்.எல்.ஏ.க்கள் சு.குணசேகரன்(திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), வி.எஸ்.காளிமுத்து (தாராபுரம்), இரா.ஜெயராமகிருஷ்ணன் (மடத்துக்குளம்), மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், சப்-கலெக்டர்கள் ஷ்ரவன் குமார், கிரேஷ் பச்சாவு, மாவட்ட வன அதிகாரி விஸ்வநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story