திருச்செந்தூர் கோவிலில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி சாமி தரிசனம் ‘காங்கிரஸ் கட்சியுடன் பிரச்சினை இல்லை’ என பேட்டி
திருச்செந்தூர் கோவிலில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று சாமி தரிசனம் செய்தார். காங்கிரஸ் கட்சியுடன் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் கோவிலில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று சாமி தரிசனம் செய்தார். காங்கிரஸ் கட்சியுடன் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்.
வரவேற்பு
கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காலை 8.45 மணிக்கு தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி கலெக்டர் பிரசாந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
பின்னர் குமாரசாமி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுமுகமாக...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்து உள்ளேன். வேறு எதுவும் இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கர்நாடகாவில் அரசியல் சூழ்நிலை சுமுகமாக உள்ளது. நல்ல நிர்வாகத்தை கொடுத்து வருகிறோம். இந்த அரசு 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடரும்.
18 எம்.எல்.ஏ.க்கள் எதிர்க் கட்சி முகாமுக்கு செல்வதாக வந்த தகவல் வதந்தி. காங்கிரஸ் கட்சிக்குள் சில பிரச்சினைகள் இருந்தன. அது அவர்கள் பிரச்சினை. அதனை அவர்கள் பேசி தீர்த்து விட்டனர். பா.ஜனதாவின் ‘ஆபரேசன் தாமரை‘ பிரசாரத்தால் எதுவும் நடக்கப்போவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாய கடன் தள்ளுபடி
தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முதல்-மந்திரி குமாரசாமி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள சூரசம்ஹார மூர்த்திக்கு திரிசதை அர்ச்சனையும், வல்லபை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.
பின்னர் குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘கர்நாடக மாநிலத்தில் அமைதியான முறையில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறோம். கர்நாடக மாநிலத்தில் விவசாய கடன் ரூ.45 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அங்கு வருகிற 10-ந் தேதிக்குள் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்‘ என்றார்.
முன்னதாக அவருக்கு, கோவில் சண்முகவிலாச மண்டபத்தில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் வருவாய்த்துறை சார்பில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) சங்கர நாராயணன், தாசில்தார் தில்லைபாண்டி, மண்டல துணை தாசில்தார் கோமதிசங்கர் ஆகியோரும் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவர் மீண்டும் தூத்துக்குடியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story