கோத்தகிரியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோத்தகிரியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2018 4:00 AM IST (Updated: 28 Sept 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 11 கிராம ஊராட்சிகளில் ஒப்பந்த பணியாளர் மற்றும் குடிநீர் பம்பு ஆபரேட்டராக மொத்தம் 150 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஊதியக்குழு நிலுவைத்தொகை உள்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். உடனே அவர்களிடம் சம்பந்தபட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏப்ரல் மாதம் 10-ந் தேதிக்குள் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையடுத்து கோடநாடு, நெடுகுளா, நடுஹட்டி ஆகிய 3 ஊராட்சிகளுக்கு மட்டும் நிலுவைத்தொகை வழங்க மொத்தம் ரூ.15 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் மற்ற ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் குடிநீர் பம்பு ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. ஒன்றியக்குழு செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

உடனே மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிராம ஊராட்சிகளின் நிதி நெருக்கடியை அறிந்து அதற்கேற்ப ஒப்பந்த பணியாளர்களுக்கு நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் குடிநீர் பம்பு ஆபரேட்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story